அப்பாஜி கதைகள் – கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி மந்திரி ஆன கதை

4.2/5 - (13 votes)

விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட மன்னரை அழைத்து அவரைத் தனிமையில் வைத்து பிரம்பாலேயே அடிப்பார், பிறகு புண்மேல் உப்பு தடவச் செய்வார்.

அப்பாஜி அம்மன்னனை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரைப் பார்க்க வந்தார். ஊருக்கு வெளியில் ஒரு சத்திரத்தில் மன்னனைத் தங்க வைத்தார். தான் தகவல் தெரிவிக்கும் வரை மன்னன் கிருஷ்ண தேவராயரின் முன்னால் வரக் கூடது என்றுக் கூறி விட்டு அவர் மட்டும் சென்று கிருஷ்ண தேவராயரை சென்று பார்த்தார். கிருஷ்ண தேவராயரும் அவரை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டார்.

சில நாட்கள் கழிந்தன.கிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் விஜய நகர சந்தை வீதியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கிருஷ்ண தேவராயர் அப்பாஜியின் முகத்தைப் பார்க்காமல் அவரிடம் “ஆமாம், உங்கள் மன்னர் எங்கே? அவரை நான் பார்க்க வேண்டுமே” என்றார்.அப்பாஜியும் உரியன செய்வதாக வாக்களித்தார்.பிறகு தன் மன்னனிடம் ரகசியத் தூதனுப்பி தன் சொந்த நாடுக்கு உடனே விரைந்துச் செல்லுமாறுக் கூறினார். மன்னரும் ஓடி விட்டார்.

சில நாட்கள் கழித்து கிருஷ்ண தேவராயர் அப்பாஜியிடம் அவர் மன்னன் இன்னும் வராததற்கானக் காரணம் கேட்டார். அப்பாஜீ அவரிடம் நடந்ததைக் கூறினார்.கிருஷ்ண தேவராயர் ஆச்சரியத்துடன் அவரிடம் “நீங்கள் செய்தது உங்கள் மன்னனைக் காப்பாற்றி விட்டது. அவருக்குத் தக்கத் தண்டனை கொடுக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதை எப்படி உணர்ந்துக் கொண்டீர்கள்?” என்று கேட்டார்.அப்போது அப்பாஜீ “மகாராஜா, நீங்கள் என் மன்னனைப் பற்றிப் பேசும் போது உங்கள் பார்வைப் போன திசையைக் கவனித்தேன். அங்கு ஒரு கசாப்புக் கடையில் ஆடுகள் தோலுறிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு எம் மன்னன் ஞாபகம் வந்தது. ஆகவே இது நல்லதுக்கல்ல என்று நான் உணர்ந்துக் கொண்டேன்” என்றார்.

அதன் பிறகு அப்பாஜி மகராஜாவிடம் மந்திரியாக இருந்தார். அது வேறு கதை, சோக முடிவுடன். அரசர்களுடன் நெருங்கி பழகுவது எப்போதுமே கத்திமுனையில் நடப்பது போலத்தான்.

Leave a comment