பாடும் பறவை… இறந்ததுபோல் ஏன் நடித்தது? – சூஃபி கதையின் தத்துவம்

3.8/5 - (11 votes)

சூஃபி கதைகள் ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை. அப்படிப்பட்ட ஒரு சூஃபி கதை இது…

சூஃபி

அந்த வியாபாரி, சமூகத்தில் வெற்றிபெற்ற மனிதன். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், பிரமாண்டமான மாளிகை, செல்வம், ஊரில் செல்வாக்கு… எல்லாம் இருந்தால், சமூகத்தின் பார்வைக்கு வெற்றிபெற்ற மனிதன்தானே! இவை மட்டுமல்ல… அவன் தனக்குத்தானே கர்வப்பட்டுக்கொள்ள யாரிடமும் இல்லாத ஒன்று அவனிடம் இருந்தது; அது ஒரு விசித்திரமான பாடும் பறவை. வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய கூண்டில், வேண்டிய அனைத்து வசதிகளுடன் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தான். அந்தப் பறவைக்குப் பிடித்தமான உணவுகள் அனைத்தையும் கொடுத்து வளர்த்து வந்தான். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களை பறவையிடம் அழைத்துச் செல்வான். பறவை பாடும். அதைக் கேட்டு, வந்தவர்கள் மெய் மறந்து நிற்பார்கள். வியாபாரி, பெருமையுடன் எல்லோரையும் பார்ப்பான். பிறகு, பறவைக்கு சுவையான நொறுக்குத்தீனிகளை அள்ளி வீசுவான். வீடு திரும்புவான்.

ஒரு நாள் வியாபாரி ஓர் அயல்நாட்டுப் பயணத்துக்காகக் கிளம்பினான். மனைவி, மகள்கள், பிள்ளைகளிடம், வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது என்ன வாங்கி வர வேண்டும் என விசாரித்தான். நகைகள், பட்டு, பொம்மைகள், ஆபரணங்கள்… என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். அத்தனையையும் கேட்டுக்கொண்டான். தோட்டத்துக்குப் போனான். அவனுடைய செல்லப் பறவையிடம், தான் வெளிநாட்டுப் பயணத்துக்குச் செல்வதைச் சொன்னான். “உனக்கு என்ன வேண்டுமோ கேள்! வாங்கி வருகிறேன்’’ என்றான்.

“எது கேட்டாலும் கிடைக்குமா?’’

“நிச்சயமாக… என்ன வேண்டும் கேள்!’’

“வெளிநாட்டில் அல்லது போகும் வழியில் என் இனத்தைச் சேர்ந்த பறவை எதையாவது பார்த்தால், ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்… முடியுமா?’’

“என்ன அது/’’

“நான் இங்கே எப்படி இருக்கிறேன், என் நிலை என்ன என்பதை மட்டும் சொன்னால் போதும்.’’

“அதற்கென்ன… சொல்லிவிடுகிறேன். வேறு ஒன்றும் வேண்டாமா? நீ உன்னைப் பார்த்து ரசிக்க தங்கத்தால் அலங்கரித்த கண்ணாடி, விலையுயர்ந்த சுவையான பருப்பு, தானியங்கள்..?’’

“வேண்டாம்.’’ சொல்லிவிட்டு பறவை கூண்டின் உயரே இருந்த மர ஊஞ்சலில் போய் அமர்ந்துகொண்டது.

சூஃபி கதை

வியாபாரி வெளிநாட்டுக்குப் போனான். வியாபாரம் நல்லபடியாக முடிந்தது. வீட்டில் உள்ளவர்கள் கேட்ட பொருள்களைத் தேடித் தேடி வாங்கினான். எல்லா வேலைகளும் முடிந்தன. இறுதியாக அவன் வளர்த்த பறவையின் விருப்பம் நிறைவேற வேண்டுமே! அதன் இனத்தைச் சேர்ந்த பறவைகள் எங்கேயாவது இருக்கின்றனவா எனத் தேடினான். ஊர் முழுக்க அலைந்த பிறகு, ஒரு நந்தவனத்தில் அவற்றைப் பார்த்தான். ஒரு மரத்தின் மேல், இவன் வளர்க்கும் பறவை இனத்தைச் சேர்ந்த மூன்று பறவைகள் அமர்ந்திருந்தன. அவற்றின் அருகே போனான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“என் மாளிகையில் உங்கள் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று இருக்கிறது. அது தன் இனத்தைச் சேர்ந்த பறவைகளைப் பார்த்தால் அதன் நிலைமையைச் சொல்லச் சொன்னது. சுகமான மெத்தை, ஊஞ்சல், வேளைக்கு அறுசுவை உணவுகள் அனைத்தையும் கொடுத்து, ஒரு கூண்டில் அதை வளர்த்துவருகிறேன்…’’

சூஃபி - பறவைகள்

அவன் முழுமையாகக்கூடச் சொல்லி முடிக்கவில்லை. கேட்டுக்கொண்டிருந்த பறவைகளில் ஒன்றின் உடல் நடுங்கியது. அது மரத்தின் உச்சியில் இருந்து `சொத்’தென்று தரையில் விழுந்தது. லேசாகத் துடித்து, பிறகு மூச்சுப் பேச்சில்லாமல் அடங்கிப்போனது. வியாபாரியால் இதைத் தாங்க முடியவில்லை. அந்தப் பறவை இறந்துபோனதை உணர்ந்தான். `அது ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவன் மனதைப் பிசைந்தது. பெரும் துயரத்தோடு தான் தங்கியிருந்த இடம் நோக்கி நடந்தான்.

திரும்பி வரும் வழியெல்லாம் `அந்தப் பறவை ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவனைத் துளைத்துக்கொண்டே இருந்தது. வியாபாரத்தில் சம்பாதித்த பணம், மனைவி, பிள்ளைகளுக்காக அவன் கொண்டு செல்லும் விலையுயர்ந்த பொருள்கள்… எதுவும் அவன் நினைவில் இல்லை. மரத்தில் இருந்து அந்தப் பறவை இறந்த காட்சி மட்டுமே திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழித்தது. சாப்பாடு இறங்கவில்லை, கப்பலில் உடன் வந்தவர்களுடன் பேசக்கூடப் பிடிக்கவில்லை. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தான்.

மனைவி, மகள்கள், பிள்ளைகள் அவன் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். அவனைப் பாராட்டித் தள்ளினார்கள். அவன் எல்லாவற்றுக்கும் லேசாகத் தலையசைத்து, புன்னகைத்தானே தவிர,  பதில் பேசவில்லை. தன் வளர்ப்புப் பறவையை எப்படிப் பார்க்கப் போகிறோம், அதற்கு எப்படி நடந்ததைச் சொல்வது என்கிற வேதனை அவனை வதைத்துக்கொண்டிருந்தது.

அடுத்த நாள் ஒருவழியாக, தன்னைத் தேற்றிக்கொண்டு அந்தப் பறவையிடம் போனான். அது, கூண்டின் மேலே இருந்த சிறிய மரக்கட்டை ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது. வியாபாரி, தயங்கித் தயங்கி, பறவைகளைப் பார்த்ததையும் நடந்ததையும் சொன்னான். அவ்வளவுதான்… கேட்டுக்கொண்டிருந்த பறவையின் உடல் நடுங்கியது; அது ஊஞ்சலில் இருந்து `சொத்’தென்று கீழே கூண்டுக்குள் விழுந்தது. அசைவற்று அப்படியே கிடந்தது. அவன் பதறிப்போனான். அவசர அவசரமாகக் கூண்டைத் திறந்தான். நடுங்கும் கரங்களால் அந்தப் பறவையைத் தூக்கினான். உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தான். திடீரென்று அது நடந்தது… அந்தப் பறவை சட்டென்று தன் சிறகுகளை அசைத்து, அவன் கைகளில் இருந்து பறந்துபோய் அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்துகொண்டது.

சூஃபி - பறவை

பறவை தன்னை ஏமாற்றிவிட்டது என்பதை அவன் புரிந்துகொண்டான். பிறகு ஒருவாறாகத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு அதனிடம் கேட்டான்… “இது என்ன தந்திரம்? உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? இறந்ததுபோல் ஏன் நடித்தாய்? சொல்!’’

“நீ பார்த்தாயே… என் உறவுக்காரப் பறவை… அது என் அழகு, வாழ்க்கை மொத்தமும் இந்தக் கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பதை எனக்கு உணர்த்திவிட்டது. என் குரலுக்கு மயங்கினாய். பாட வைத்தாய். நீ பாடச் சொல்வதும், அதற்கு இணங்கி நான் பாடுவதும்கூட எனக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனால், எந்தப் பறவையும் கூண்டு வாழ்க்கையை விரும்புவதில்லை. அந்த வாழ்க்கை எனக்கு இனி வேண்டாம். பறத்தல்தான் என் இயல்பு, எனக்கு வேண்டியது சுதந்திரம்…’’

அந்தப் பறவை வானில் கிளம்பி, சிறகசைத்துப் பறந்து அவன் கண்ணில் இருந்து மறைந்தது.

One Comment

  1. Johnbosco Christopher
    Super Super
    Reply August 28, 2020 at 7:32 pm

Leave a comment